வடக்கு - கிழக்கில் அதிகரித்துள்ள போதைப்பாவனை!

user 07-Mar-2025 இலங்கை 125 Views

போதைபொருட்களை அரசாங்கமே தனது சொந்த மக்களிற்கு விநியோகிக்கும் மிகமோசமான நிலைமை இந்த நாட்டில் நிலவுகின்றது. இந்த நிலைமையை இந்த அரசு தொடரக் கூடாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பாதீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும், "போதைவஸ்த்து பாவனை என்பது நாடு முழுவதிலும் காணப்பட்டாலும் போருக்கு பின்னரான காலப்பகுதியில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் மிகவும் அதிகமாக காணப்படுகின்றது. இது போரிற்கு பின்னரான சமூக விளைவாகவே நான் பார்க்கின்றேன்.

அந்த வகையில் இந்த போதைவஸ்த்து பிரச்சினையை கட்டுப்படுத்த வேண்டுமாக இருந்தால் நாட்டினுடைய சட்டம் முழுமையாக நடைமுறைபடுத்தப்படல் வேண்டும். சட்டம் முழுமையாக நடைமுறைபடுத்தப்படாமல் போதைவஸ்த்து பாவனையை கட்டுப்படுத்த முடியாது.

தடுப்பதற்கான சட்டங்கள் இருந்த போதிலும் அதனை கடந்த காலங்களில் அரசாங்கங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை என்பதை மறுக்கமுடியாது.

போர் முடிவடைந்த பின்னர் குறிப்பாக 2010ஆம் ஆண்டில் பாடசாலைகளில் உயர்தரத்தில் கல்விகற்கின்ற மாணவர்களுக்கு அரச இயந்திரத்தில் இருந்த படையினர் போதைவஸ்த்துக்களை விநியோகித்தார்கள் என்பது உண்மை அதன் தொடர்ச்சியான நிலைமையை தற்போதைய அரசாங்கமும் தொடர்ந்து செய்யாது என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.

அந்த வகையிலே போதைவஸ்த்துக்களை அரசாங்கமே தனது மக்களிற்கு விநியோகிக்கும் நிலைமையை இந்த அரசு தொடரக்கூடாது என்பது எனது வேண்டுகோளாகும்.

ஆகவே இருக்கின்ற சட்டங்களை இறுக்கமாக நடைமுறைப்படுத்த வேண்டும். மதுப்பாவனைக்கான வயதுக்கட்டுப்பாடு கட்டாயமாக பின்பற்றப்படல் வேண்டும். எமது பிரதேசங்களில் மக்கள் தொகைக்கு மேலதிகமாக மதுபான நிலையங்கள் காணப்படுகின்றன.

பொது இடங்களில் மதுபாவனை நடைபெறுகின்றது. சட்டவிரோத போதைப்பாவனையை கட்டுப்படுத்த கூடிய சட்ட அதிகாரம் பொலிஸாரிடம் இருக்கின்றது. அதனை அவர்கள் பயன்படுத்துகின்றார்களா என்றால் இல்லை.

இதனை நான் பகிரங்கமாக சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் மதுப்பாவனை போதைப் பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ புனர்வாழ்வு நிலையங்கள் எமது மாகாண சுகாதார அமைச்சினால் அமைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரி, கிளிநொச்சியில் தர்மபுரம், முல்லைத்தீவில் ஒட்டுசுட்டான், வவுனியாவில் பூவரசங்குளம், மன்னாரில் அடம்பன் ஆகிய இடங்களில் மருத்துவ புனர்வாழ்வு நிலையங்கள் காணப்படுகின்றது.

எனினும் அவை சீராக இயங்குவதற்கான ஆளணிப்பற்றாக்குறை காணப்படுகின்றது. எனவே சுகாதார அமைச்சர் அதற்கான தீர்வினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்” என குறிப்பிட்டார். 

 

Related Post

பிரபலமான செய்தி