யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் விக்னேஸ்வரன் ஆகாஷ் மற்றும் குகதாஸ் மாதுலனின் அபார பந்துவீச்சின் உதவியோடு பங்களாதேஷ் 19 வயதுக்கு உட்பட்ட முதலாவது இளையோர் ஒருநாள் போட்டியில் இலங்கை இளையோர் அணி 98 ஓட்டங்களால் இலகு வெற்றியீட்டியது.
கொழும்பு, சி.சி.சி. மைதானத்தில் நேற்று முன்தினம் (26) நடைபெற்ற இந்தப் போட்டியில் 242 ஓட்ட வெற்றி இலக்கை துரத்திய பங்களாதேஷ் இளையோர் அணிக்கு யாழ். பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஆகாஷ் நெருக்கடி கொடுத்தார்.
குறிப்பாக பங்களாதேஷ் அணியின் மத்திய வரிசை விக்கெட்டுகளை அவர் அடுத்தடுத்து சாய்த்தார். அதேபோன்று லசித் மாலிங்க பணியில் பந்துவீசும் யாழ். பரி யோவான் கல்லூரியைச் சேர்ந்த மாதுலன் ஆரம்பத்திலேயே முக்கிய விக்கெட்டை வீழ்த்தி வெற்றிக்கு உதவினார்.
இதனால் பங்களாதேஷ் 19 வயதுக்கு உட்பட்ட அணி 33.3 ஓவர்களில் 143 ஓட்டங்களுக்கே சுருண்டது. இதன்போது ஆகாஷ் 9 ஓவர்களுக்கு 35 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார். அதேபோன்று மாதுலன் 6.3 ஓவர்களில் 30 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு கித்ம விதானபத்திரணவும் 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
முன்னதாக நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி சார்பில் மத்திய வரிசையில் சாமிக்க ஹீன்டிகல (ஆட்டமிழக்காது 78), சஞ்சு வெகுனகொட (50) மற்றும் மத்திய பின் வரிசையில் கவிஜ கமகே (ஆட்டமிழக்காமல் 60) ஆகியோர் அரைச்சதம் பெற்றனர். இதன்மூலம் இலங்கை இளையோர் அணி 50 ஓவர்களுக்கும் 6 விக்கெட்டுகளை இழந்து 241 ஓட்டங்களை பெற்றது.
இந்த வெற்றியுடன் ஆறு போட்டிகளைக் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் இலங்கை இளையோர் அணி 1–0 என முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி இன்று (28) ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளது.