காசாவில் நேரடி ஒளிபரப்பாகும் இனப்படுகொலை...

user 30-Apr-2025 சர்வதேசம் 45 Views

காசாவில் இடம்பெறுவது பலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் ‘நேரடி ஒளிபரப்புச் செய்யப்படும் இனப்படுகொலை’ என சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம்சாட்டியுள்ளது.

பெரும்பாலான மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி, திட்டமிட்டு மனிதாபிமான பேரழிவு ஒன்றை உருவாக்கி வருவதாக நேற்று (29) அவ்வமைப்பு வெளியிட்டுள்ள வருடாந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் ‘காசாவில் உள்ள பலஸ்தீனர்களை அழிக்கும் நோக்கத்துடன் செயற்படுவது இனப்படுகொலையாகும்’ என அது சுட்டிக்காட்டியுள்ளது.

காசா போரில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுவதாக மன்னிப்புச் சபை தவிர மேலும் பல உரிமைக் குழுக்கள் மற்றும் சில நாடுகள் குற்றம்சாட்டுகின்றபோதும் இஸ்ரேல் அதனை நிராகரித்து வருகிறது. எனினும் காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து உக்கிர தாக்குதல்களை நடத்தி வருவதோடு அந்தப் பகுதியை இரண்டு மாதங்களுக்கு மேலாக உதவிகள் செல்ல முடியாமல் முடக்கி பாரிய மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டிருக்கும் நிலையிலேயே மன்னிப்புச் சபை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

கடந்த 2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலை அடுத்தே காசா போர் வெடித்தது. ‘அது தொடக்கம் நேரடியாக ஒளிபரப்பப்படும் இனப்படுகொலை ஒன்றின் பார்வையாளர்களாக உலகம் மாறியுள்ளது’ என்று மன்னிப்புச் சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘இஸ்ரேல் ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்களை கொன்று பல தலைமுறைகளின் ஒட்டுமொத்த குடும்பங்களை இல்லாதொழித்து, வீடுகள், வாழ்வாதாரங்கள், வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலைகளை அழித்துவரும் நிலையில் நாடுகள் வலுவற்றவை போன்று பார்த்து வருகின்றன’ என்று அந்த ஆண்டு அறிக்கையில் சாடியுள்ளது.

 

தெற்கு காசாவில் உள்ள அல் அக்லீம் பகுதிக்கு அருகே இடம்பெயர்ந்தவர்களின் கூடாரங்கள் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் நால்வர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்ததாக காசா சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தெற்கு காசாவில் உள்ள அம்புலன்ஸ்கள் உட்பட 12 அவசர உதவி வாகனங்களில் எட்டை இடைநிறுத்தும் நிலைக்கும் தள்ளப்பட்டிருப்பதாக அந்த நிறுவனம் முன்னதாக எச்சரித்திருந்தது.

எரிபொருள் பற்றாக்குறை, தற்காலிக முகாம்களில் உள்ள இடம்பெயர்ந்த மற்றும் ஆயிரக்கணக்கான குடிமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி இருப்பதாக அது வெளியிட்ட அறிக்கை ஒன்று குறிப்பிட்டுள்ளது.

வடக்கு காசாவின் பெயித் லஹியாவில் அல் பரக்கா பள்ளிவாசலுக்கு அருகே இஸ்ரேல் கடந்த திங்கட்கிழமை (28) இரவு நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது. காசா நகர் மற்றும் கான் யூனிஸில் கடந்த திங்கள் இரவு தொடக்கம் நேற்று காலை வரை இடம்பெற்ற தாக்குதல்களில் 32இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

 

காசாவில் இஸ்ரேல் இடைவிடாது நடத்தும் தாக்குதல்களில் உயிரிழந்த பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 52,314 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 117,792 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் நடவடிக்கை காசாவின் பெரும்பாலான பலஸ்தீனர்கள் வெளியெற்றப்பட்டு வீடற்றவர்களாக மாற்றப்பட்டு பட்டினி நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் மருத்துவ பராமரிப்பு, மின்சாரம் மற்றும் சுத்தமான நீரை பெற முடியாத நிலையை எதிர்கொண்டிருப்பதாகவும் உயிர் அச்சுறுத்தல் ஏற்படுத்து நோய்கள் பரவும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் மன்னிப்புச் சபையின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு முழுவதும் இஸ்ரேல் பொதுமக்கள் மற்றும் பொதுமக்களின் இலக்குகள் மீது நேரடி தாக்குதல்கள் நடத்தியது மற்றும் கண்மூடித்தனமாக தாக்குதல்களை நடத்திய உட்பட பல போர் குற்றங்களை நிகழ்த்திய சம்பவங்களை ஆவணப்படுத்தியதாக அந்த அமைப்பு கூறியது. இஸ்ரேலின் நடவடிக்கைகளால் காசா மக்கள் தொகையின் சுமார் 90 வீதமான 1.9 மில்லியன் மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டிருப்பதாகவும் திட்டமிட்டு முன்னெப்போதும் காணாத மனிதாபிமான பேரழிவை உருவாக்கி இருப்பதாகவும் அது குறிப்பிட்டது.

மேற்குலக நாடுகளின் தலைநகரங்களில் ஆர்ப்பட்டங்கள் இடம்பெற்றபோதும் கூட, சர்வதேச நாடுகள் தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் இந்த அட்டூழியத்தை முடிவுக்குக் கொண்டுவர அர்த்தபூர்வமான நடவடிக்கையை எடுப்பதற்கு தவறி வருவதோடு போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுப்பதிலும் கூட மந்தம் காட்டுகின்றன என்றும் அந்த ஆண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Post

பிரபலமான செய்தி