போதைப்பொருள் நடவடிக்கைகள் சம்பந்தமான குற்றச்சாட்டுக்களின் கீழ் 500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒரு பகுதியினரை பணி நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
பஹலகம பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்றுக்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் விசேட அதிதியாக கலந்துகொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இவ்வாறிருக்க நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுவரும் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விசேட நடவடிக்கைகளின் கீழ் பல்வேறு குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புபட்ட 22 பேரும் பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 263 பேரும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 141 பேரும் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் 424 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.