வெற்றியில் முடிந்தது தொழிலாளர்களின் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்

user 12-Feb-2026 இலங்கை 24 Views

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை, கவரவில தோட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட எட்டு தொழிலாளர்களும் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை இன்றுடன் நிறைவு செய்துள்ளனர்.

தோட்ட நிர்வாகம் குறித்த 8 தொழிலாளர்களையும் மீண்டும் வேலைக்கு அனுமதிப்பதாகக் கடிதத்தின் மூலம் உத்தியோகபூர்வமாக அறிவித்ததையடுத்து இந்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

கடந்த 3ஆம் திகதி, கவரவில் தோட்டத்தைச் சேர்ந்த எட்டு தொழிலாளர்கள் தமக்குப் பணி இடைநீக்கம் வழங்கப்பட்டமையானது தோட்ட முகாமையாளரின் பழிவாங்கும் செயல் எனக் குற்றஞ்சாட்டி, அதற்கு நீதி கோரி சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

 ஹட்டன் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் தோட்ட நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், நிர்வாகம் முதலில் 8 பேரில் 6 பேரை மட்டுமே மீண்டும் வேலையில் அமர்த்தச் சம்மதித்தது. எனினும், 8 பேரையும் நிபந்தனையின்றி மீண்டும் வேலைக்கு அமர்த்த வேண்டும் என சத்தியாக்கிரகமாகத் தொடங்கிய போராட்டம், கடந்த 10ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டமாக மாறியது.

அன்றைய தினமே நிர்வாகம் அவர்களை வேலைக்கு அனுமதிப்பதாக வாய்மொழியாகக் கூறிய போதிலும், எழுத்து மூலமான உறுதிப்படுத்தலைக் கோரி தொழிலாளர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இந்நிலையில், நேற்று (12) காலை போராட்டத்தில் ஈடுபட்ட மூவர் மயக்கமுற்ற நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்துப்  தோட்ட நிர்வாகம், இன்று காலை 8 தொழிலாளர்களையும் வேலைக்கு அனுமதிப்பதாக எழுத்து மூலம் அறிவித்ததை அடுத்துப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

Related Post

பிரபலமான செய்தி