போதைப்பொருள் வாங்க மனைவியை விற்ற கணவன் (மூன்று பிள்ளைகளின் தாய்)

user 21-Apr-2026 இலங்கை 54 Views

    இலங்கையில் போதைப்பொருள் வாங்க தனது மனைவியை அண்டை வீட்டார் ஒருவருக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் அயல் வீடாரையும், பெண்ணைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட மற்றொருவரையும் கைது செய்வதற்கு கண்டி - அலவதுகொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, முப்பத்தைந்து வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான அந்தப் பெண், தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் கண்டி ஏரியில் குதித்துள்ளார். இதன்போது முச்சக்கர வண்டி சாரதி ஒருவரால் அவர் காப்பாற்றப்பட்டு, அகுரண பிரதேச செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் பேராதனை போதனா வைத்தியசாலையின் மனநலப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு வைத்தியர்களிடம் நடந்த சம்பவங்கள் குறித்து பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பெண்ணின் வாக்குமூலத்தின்படி, போதைப்பிற்கு அடிமையான அவரது கணவர், சில வருடங்களுக்கு முன்னர் தனது சிறுநீரகத்தை 11 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்து அந்தப் பணத்தையும் போதைப்பொருள் பாவனைக்கே செலவிட்டுள்ளார்.

போதைப்பொருள் வாங்க பணம் இல்லாத நிலையில், அண்டை வீட்டாருடன் உடலுறவில் ஈடுபடுமாறு கணவர் தன்னை வற்புறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது கை, கால்களைக் கட்டி வைத்து வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும், அதனால் ஏற்பட்ட கடும் மன உளைச்சல் காரணமாகவே தான் ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது பேராதனை போதனா வைத்தியசாலையில் அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது மூன்று பிள்ளைகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கும் அகுரண பிரதேச செயலகத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸாருக்கு வழங்க வைத்தியசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவதுகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post

பிரபலமான செய்தி