இந்துக்களின் விசேட பண்டிகையான கார்த்திகை விளக்கீடு தினமாகிய நேற்றைய தினம்(13) இலங்கையில் பல முருகன் ஆலயங்களில் முருக பெருமானுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றுள்ளன.
அந்தவகையில், வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் கார்த்திகை விளக்கீட்டின் குமாராலயதீப உற்சவ நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
மாலை 4:30 மணியளவில் முருகப் பெருமானுக்கு வசந்த மண்டப பூஜை இடம்பெற்று முருகப்பெருமான் உள் வீதி வலம் வந்து கோயில் முன்வாயிலில் சொக்கப்பானை எனப்படும் கார்த்திகை தீபம் பனை ஓலைகளால் விசேடமாக வடிவமைக்கப்பட்ட இடத்தினை எரியூட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
சொக்கப்பானை நிகழ்வு இடம்பெற்ற பின்னர் நல்லூர் முருக பெருமான் கைலாய வாகனத்தில் வெளிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சொக்கபானை நிகழ்வில் பெருமளவு முருகன் அடியவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை, வவுனியாவில்(Vavuniya) பல முருகன் ஆலயங்களில் குமராலாய தீபம் ஏற்றி விசேட வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக வவுனியா கந்தசாமி ஆலயத்தில் பல நூற்றுக்கணக்கான பக்தர்களின் வழிபாட்டுக்கு மத்தியில் விசேட அபிசேக, பூஜை வழிபாடுகளின் பின் குமாரலய தீபம் ஏற்றப்பட்டுள்ளது.
பின்னர் ஆலயத்தின் முன்பாக அலங்கரிக்கப்பட்ட சொக்கப்பானையில் தீபம் ஏற்றி வழிபட்டதை தொடர்ந்து சாமி வெளி வீதி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.