யாழ். போதனா வைத்தியர்களின் வேலைநிறுத்த போராட்டம் இடைநிறுத்தம் !

user 05-Mar-2025 இலங்கை 261 Views

யாழ். போதனா வைத்தியசாலையில் மட்டுப்படுத்தப்பட்டளவில் மேற்கொள்ளப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பை நேற்று மாலை முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இடைநிறுத்தியுள்ளது.

வைத்தியசாலை நிர்வாகத்திற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டு தீர்வு எட்டப்படாவிடில் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பை நடத்தவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் திட்டமிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவசர சிகிச்சை தவிர்ந்த ஏனைய சிகிச்சைகளை இடைநிறுத்தி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் கடந்த வியாழக்கிழமை முதல் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இந்நிலையில் அரச வைத்திய அதிகாரிகளின் தாய்ச் சங்கத்துடன் யாழ் போதனா வைத்தியசாலைக் கிளைச் சங்கம் கலந்துரையாடிய பின்னர் , மட்டுப்படுத்தப்பட்ட அளவில் போராட்டத்தை தொடர்ந்தது.

இதன்போது அவசரமற்ற சத்திர சிகிச்சைகள் வைத்தியர்களால் மேற்கொள்ளப்படவில்லை. தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நேற்று மாலை முதல் ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டு பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது.

விபத்து அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்தியர் மற்றும் தாதி உத்தியோகத்தர் இடையே ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி வைத்தியர்களால் பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டது.

பணிப்பகிஷ்கரிப்பு காலத்தில் ரத்து செய்யப்பட்டவர்களுக்கான சத்திர சிகிச்சைகள் விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Related Post

பிரபலமான செய்தி