மாவை சேனாதிராஜாவின் வீட்டில் பொலிஸார் விசாரணை !

user 08-Feb-2025 இலங்கை 129 Views

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மறைந்த அரசியல்குழுத் தலைவரும் மூத்த தலைவருமான மாவை.சோ.சேனாதிராஜாவின் குடும்பத்தவர்களிடத்தில் காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தால் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே மேற்படி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த மாவை.சோ.சேனாதிராஜாவின் இறுதி நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தருணத்தில் அன்னாரது பூதவுடல் தகனம் செய்யப்பட்ட தச்சன்காடு இந்து மயானத்தில் தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் வடக்கு, கிழக்கு தமிழர்களின் சார்பில் 'மாவையின் மரணத்திற்கு காரணமான தமிழினத்தின் தமிழரசுக் கட்சியின் துரோகிகள்' என்னும் தலைப்பிடப்பட்ட பதாகை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

அப்பதாகை காட்சிப்படுத்தப்பட்டமையின் காரணமாக தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கலாம் என்ற அச்சம் காணப்பட்ட நிலையில் தன்னால் இறுதி அஞ்சலி நிகழ்வில் பங்கேற்க முடியாது போனதாகவும், ஆகவே குறித்த பதாகையை காட்சிப்படுத்தியவர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறும் சி.வி.கே.சிவஞானத்தால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த பதாகையில், சுமந்திரன், சேயோன், பீற்றர் இளஞ்செழியன்,சாணக்கியன்,ரஞ்சினி,கலையரசன், சத்தியலிங்கம், சயந்தன், குலநாயகம், துரைராஜசிங்கம், சாந்தி ஸ்ரீறிஸ்கந்தராசா, கமலேஸ்வரன், இரத்தினவேல், கண்ணதாசன், சேனாதிராசா,பரஞ்சோதி, செல்வராசா ஆகியோரின் பெயர்களே காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Related Post

பிரபலமான செய்தி