இரண்டாவது 20க்கு 20 போட்டியில் பந்துவீசும்போது இடது தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக இலங்கை கிரிக்கட் அணியின் வனிந்து ஹசரங்க நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் கொழும்பு திரும்பிய ஹசரங்க, சிகிச்சைப் பெற்று வருவதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் தெரிவித்துள்ளது. இதனையடுத்து ஹசரங்கவிற்கு பதிலாக துசான் ஹேமந்த அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
சுற்றுலா நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடர் கிரிக்கட் போட்டிகள், இன்று , நவம்பர் 13 ஆம் திகதி ஆரம்மாகவுள்ளன.
தொடரின் மீதமுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகள் நவம்பர் 17 மற்றும் 19 ஆம் திகதிகளில் நடத்தப்படவுள்ளன. முதல் போட்டி ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், இறுதி இரண்டு போட்டிகள் பல்லேகல சர்வதேச மைதானத்திலும் நடைபெறுகின்றன.
இதற்கிடையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, வியக்கத்தக்க வெற்றியுடன் 20க்கு20 தொடரை சமன் செய்த நியூசிலாந்து, ஒருநாள் தொடரில் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் லக்கி பெர்குசன் இல்லாமலேயே விளையாடவுள்ளது.
இரண்டாவது 20க்கு20 போட்டியில் ஹெட்ரிக் விக்கெட்டுக்களை கைப்பற்றிய பெர்குசன், தனது இரண்டாவது ஓவரை வீசும்போது ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதனையடுத்து, பெர்குசனுக்கு பதிலாக எடம் மில்னே நியூசிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.