ஐந்து நாடுகளுக்கான தனது பயணத்தை நேற்று ஆரம்பித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நேற்று மாலை கானா ஜனாதிபதியைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் செல்லும் வழியில் கானா, டிரினிடாட் மற்றும் டுபாகோ, அர்ஜென்டினா மற்றும் நமீபியா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி நேற்று முதல் 9ஆம் திகதி வரை பயணம் மேற்கொள்கிறார். இதற்காக, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடிநேற்றுக்காலை காலை புறப்பட்டுச் சென்று நேற்று மாலை கானா சென்றடைகிறார்.
கானா, டிரினிடாட் மற்றும் டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா தலைவர்களுடன் வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம், வேளாண்மை மற்றும் சுகாதாரம் உட்பட பல துறைகளில் ஒத்துழைப்புடன் செயல்படுவது குறித்து பிரதமர் மோடி ஆலோசிக்கிறார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா உள்ளிட்ட நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் 17ஆவது உச்சி மாநாடு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் 6, 7 ஆகிய திகதிகளில் நடைபெறும். இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
டெல்லியில் இருந்து புறப்படுவதற்கு முன்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில், “அடுத்த சில நாட்களில், கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியாவில் பல்வேறு இருதரப்பு, பலதரப்பு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருக்கிறேன். உலகத் தலைவர்களுடன் உரையாடி, நமது உலகை மேம்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
இன்று, ஜூலை 3 ஆம் திகதி கானா பாராளுமன்றத்தில் உரையாற்றும் வாய்ப்பைப் பெறுவது ஒரு மரியாதை.
ஜூலை 3 மற்றும் 4 ஆம் திகதிகளில், இந்தியா வரலாற்று ரீதியாகப் பிணைந்துள்ள நாடான டிரினிடாட் மற்றும் டுபாகோவில் இருப்பேன். அதிபர் கிறிஸ்டின் கார்லா கங்காலூ மற்றும் பிரதமர் கம்லா பெர்சாட்-பிஸ்ஸேசர் உடனான சந்திப்புகள் நமது நாடுகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் கலாசார ஒத்துழைப்புக்கு உத்வேகம் அளிக்கும்.
57 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் இருதரப்புப் பயணமாக அர்ஜென்டினாவுக்கு எனது பயணம் இருக்கும். இந்தியாவும் அர்ஜென்டினாவும் ஜி20 அமைப்பில் இடம்பெற்றுள்ளன. மேலும், தொழில்நுட்பம் மற்றும் புதுமை போன்ற எதிர்காலத் துறைகளில் பொருளாதார தொடர்புகளை மேம்படுத்துவதற்காக இருதரப்பு ரீதியாக நெருக்கமாகச் செயல்படுகின்றன. இந்தப் பயணத்தின் போது ஜனாதிபதி ஜேவியர் மிலேயுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளேன்.
பிரேசில் பயணத்தின்போது, ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளேன். அத்தோடு, இருதரப்பு அரசு முறைப் பயணமாகவும் இது இருக்கும். இந்திய பிரதமர் ஒருவர் பிரேசில் செல்வது கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பிறகு இதுவே முதல்முறை. ரியோ பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது உலகத் தலைவர்களுடன் பல்வேறு சந்திப்புகள் இருக்கும். இந்தியா-பிரேசில் ஒத்துழைப்பின் புதிய வழிகளைப் பற்றி விவாதிக்க அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவைச் சந்திக்க ஆர்வமாக உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.