மனித உரிமைகள் பேரவையின் தொடக்க உரையில் இலங்கை குறித்து பிரஸ்தாபிக்க படவில்லை !

user 25-Feb-2025 இலங்கை 120 Views

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (24) ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் நிலையில், நேற்றைய தொடக்க அமர்வில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்,  இலங்கை தொடர்பில் குறிப்பாக எதனையும் பிரஸ்தாபிக்கவில்லை.

இருப்பினும் விசேடமாக இஸ்ரேல் - பலஸ்தீன மோதலால் மக்கள் மிகமோசமான துயரத்துக்கு முகங்கொடுத்திருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், சர்வதேச சட்டங்களுக்கு முரணாக இஸ்ரேலினால் காஸா மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்தும், ஹமால் உள்ளிட்ட ஏனைய பலஸ்தீன ஆயுதக்குழுக்களின் மீறல்கள் குறித்தும் சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்படவேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.

அதேபோன்று சர்வதேச மனித உரிமைகள் நிலைவரம், உலகளாவிய ரீதியில் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் முகங்கொடுத்துவரும் நெருக்கடிகள், காலநிலை மாற்ற சவால்கள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் தவறான பிரயோகம் என்பன உள்ளடங்கலாக உலகநாடுகள் மத்தியில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தவல்ல பொதுவான விடயங்கள் குறித்து வோல்கர் டேர்க் அவரது உரையில் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் இக்கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பங்கேற்றிருக்கும் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், செவ்வாய்க்கிழமை (25) ஜெனிவா நேரப்படி பி.ப 3.40 மணிக்கு உரையாற்றவுள்ளார்.

இதன்போது பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும், நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து அவர் தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை இலங்கை தற்போது நடைமுறையிலிருக்கும் தீர்மானத்தை எவ்வாறு அமுல்படுத்துகின்றது என்பது குறித்து எதிர்வரும் 3 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் வாய்மொழிமூல அறிக்கையை வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related Post

பிரபலமான செய்தி