பொறுப்பானவர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் பிரதமர் மோடி எச்சரிக்கை

user 28-Apr-2025 இந்தியா 57 Views

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவுகள் அதிகளவில் மோசமடைந்துள்ளன. அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இரு அண்டை நாடுகளும் தற்போது இராஜதந்திர மற்றும் இராணுவ அச்சுறுத்தல்களை விடுத்துக் கொண்டிருக்கின்றன, இதனால் காஷ்மீர் பிரச்சினை சர்வதேச அளவில் மிகுந்த கவலையை உருவாகியுள்ளது.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், 25 இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஒரு நேபாள குடிமகன் கொல்லப்பட்ட தாக்குதல், கடந்த இருபதாண்டுகளில் பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட மிகக் கொடூரமான தாக்குதல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. முக்கியமான எந்த பயங்கரவாதக் குழுவும் இதற்கு பொறுப்பேற்கவில்லை என்றாலும், இந்திய அதிகாரிகள் இந்த தாக்குதலுக்குப் பாகிஸ்தான் தளமாகக் கொண்ட அமைப்புகளே பொறுப்பு எனக் கூறினர். இதனால், இந்தியா வலுவான இராணுவ பதிலடி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பெருகியுள்ளன.

 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தாக்குதலுக்குப் பொறுப்பானவர்களுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் “கடுமையான தண்டனை” அளிக்கப்படும் என உறுதியளித்தார். அவர்கள் “பூமியின் கடைசி எல்லை வரையிலும்” தொடர்ந்து தேடப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.

புதுடில்லி தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக, இந்தியாவுக்கான பாகிஸ்தானியர்களின் விசாக்களை இரத்து செய்ததுடன், பாகிஸ்தான் தூதர்களை திருப்பியனுப்பி 1960ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து பங்கேற்பையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

 

இதேவேளை, இந்திய பாதுகாப்புப் படைகள் காஷ்மீர் முழுவதும் ஒரு பெரிய அளவிலான அடக்குமுறையை மேற்கொண்டு, பயங்கரவாதிகளாக சந்தேகிக்கப்படுவோரின் வீடுகளை இடித்து நூற்றுக்கணக்கானவர்களை கைது செய்துள்ளன.

முன்னாள் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தி உள்ளிட்ட மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள், இவ்வாறான நடவடிக்கைகளால் மக்கள் மேலும் அந்நியப்படுத்தப்படுவார்கள் என்று எச்சரித்து, அரசு பொதுமக்களையும் போராளிகளையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

விசாரணைக்கு ஒத்துழைக்க தயார் – பாகிஸ்தான்

காஷ்மீரில் அண்மையில் நடந்த தாக்குதலை இஸ்லாமாபாத் மறுத்துள்ளது. “நடுநிலை விசாரணை” நடத்த வேண்டும் என்றும், சர்வதேச புலனாய்வாளர்களுடன் ஒத்துழைக்க தயார் என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. அமைதிக்கான தமது உறுதிப்பாட்டை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி மீண்டும் வலியுறுத்தினார், ஆனால் நாட்டின் இறையாண்மையில் எந்த சமரசமும் செய்யப் போவதில்லை என்றும் எச்சரித்தார்.

இந்தியாவின் நடவடிக்கைகளுக்குப் பதிலளிக்க பாகிஸ்தான், சிம்லா ஒப்பந்தத்தில் பங்கேற்பதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது, இந்திய விமானங்களுக்கு தனது வான்வெளியை மூடியுள்ளது மற்றும் இந்திய தூதர்களை வெளியேற்றியுள்ளது. மேலும், நதி நீரை நிறுத்துவதற்கான எந்த முயற்சியும் “போர் நடவடிக்கை” எனக் கருதப்படும் என்று பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.

 

இந்திய கடற்படையின் சமீபத்திய துல்லியத் தாக்குதல் பயிற்சிகள், பிரதமர் மோடியின் வலுவான பதிலடி அறிக்கைகளுடன் இணைந்து, விரைவில் ஒரு இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற அச்சத்தை தூண்டியுள்ளது. பதிலடி திட்டங்கள் தீவிரமாக விவாதிக்கப்படுகின்றன என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன,

கட்டுப்பாட்டு எல்லையில் (LoC) உள்ள கிராம மக்கள், எதிர்கால மோதல்களில் சிக்கிக்கொள்ளக் கூடும் என்ற பயத்தில் வெளி யற ஆயத்தமாகி வருகின்றனர். 2019ஆம் ஆண்டு நடந்த இந்தியா- – பாகிஸ்தான் வான்வழி மோதல்களின் நினைவுகள் அவர்களிடம் இன்னமும் ஆழப்பதிந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஈரான் போன்றவை சமாதானத்துக்கான அழைப்புகளை விடுத்துள்ளன.

வலுவான சர்வதேச மத்தியஸ்தம் இல்லாமை இரு நாடுகளும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வழிவகுக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். “இரு தரப்பிலும் தவறான கணக்கீடு செய்யும் ஆபத்து உண்மையாக உள்ளது,” என்று முன்னாள் பாகிஸ்தான் தூதர் மலீஹா லோதி கூறினார். “அவசர இராஜதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்படாவிட்டால், நாம் ஒரு முழுமையான நெருக்கடிக்குள் விழக்கூடும் என்று அவர் கூறினார்.

Related Post

பிரபலமான செய்தி