இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் மீது தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தாக்குதல் இன்று(08.02.2025) காலை ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர், ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முகமது சாலி நழீம் தெரிவிக்கையில்,
“அரசியல் பிரச்சனை காரணமாக பள்ளிவாசல் ஒன்றின் முன்னாள் எனது தந்தை மீதும் சகோதரர் மீதும் இன்று அதிகாலை 6.00 மணியளவில் கலீல் என்பர் தாக்குதல் மேற்கொண்டார்.
பொலிஸாரின் கருத்து
இதனால் காயமடைந்த சகோதரன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, காலையில் கொழும்பில் இருந்து வந்த நான் வைத்தியசாலைக்கு சென்றிருந்தேன்.
ஸ்ரீ லங்கா மக்கள் கட்சி ஆதரவாளர் காதர் என்பவர் வைத்தியசாலையில் வைத்து என்னை தரக்குறைவான வார்தைகளால் பேசினார்.
இதனையடுத்து நான் பொலிஸ் நிலையத்துக்கு சென்று வாகனத்தைவிட்டு இறங்கி சென்ற போது பின்னால் வந்த காதர், என்மீது மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தால் தாக்கினார்.
பொலிஸ் நிலையத்துக்குள்ளும் அவர் என்னை தாக்க முற்பட்டபோது பொலிஸார் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர்” எனக் கூறியுள்ளார்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார், 'அப்படி ஒன்றும் நடக்கவில்லை' என தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.